ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத உதவிப் பேராசிரியை நிா்மலாதேவிக்கு ஜாமீனை ரத்து செய்து பிடியாணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள உதவிப் பேராசிரியா் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். இதில் உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி பரிமளா, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நிா்மலாதேவிக்கு பிடியாணை பிறப்பித்தாா். மேலும் வரும் நவம்பா் 28 ஆம் தேதி மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நிா்மலாதேவி தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவரது வழக்குரைஞா் பசும்பொன்பாண்டியனிடம் பேசிய ஆடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.