வருமானம் இல்லை: ரயில் முன் பாய்ந்து புகைப்படக் கலைஞர் தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக சனிக்கிழமை வழக்கு பதிந்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஜோசப்(36). புகைப்படக் கலைஞரான இவருக்குத் திருமணமாகி மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது குடும்பம் புலியூரானில் இருந்த நிலையில், அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையமருகே வாடகைக் கடையில் திருமண வீடியோ, புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ வைத்து தொழில் செய்து வந்தாராம். இதனிடையே பல மாதங்களாகத் தொடரும் கரோனா ஊரடங்கு காரணமாகப் புகைப்படக் கலைஞரான இவரது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாம்.
இதனால் அவர் தனது தொழிலுக்குப் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த கேமரா, வாகனம் உள்ளிட்டவற்றைப் பணப் பற்றாக்குறையால் அடகு வைத்தாராம். இந்நிலையில் அடகு வைத்த பொருட்களுக்கு பணம் திரும்பக் கட்ட இயலாமலும், வட்டி கட்ட இயலாமலும், மீண்டும் தொழில் செய்ய முடியாமலும் தவித்த ஜோசப், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை புலியூரானில் இருந்த தனது வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் அன்று இரவு முழுவதும் வீடு திரும்பவில்லையாம்.
குடும்பத்தினர் அவரைப் பல இடங்களிலும் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை நண்பகல் சுமார் 2 மணிக்கு புலியூரான் கிராமமருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்த நிலையில் அவரை கிராமத்தினர் அடையாளம் கண்டு, திருச்சுழி காவல்துறைக்குத் தகவல் தந்தனராம். அவர்கள் விருதுநகர் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தந்ததன்படி, ரயில்வே காவல்துறையினர் நேரில் வந்து ஜோசப்பின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் முதற்கட்ட தகவலாக புலியூரான் கிராமம் வழியாக வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணிக்கு வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு அவர் இறந்தார் என்பதும், அவர் உடல் கிடந்த இடம் சட்டென யாரும் காணமுடியாதபடி, அங்குள்ள பாலத்தின் உச்சியில் கிடந்ததாகவும் தெரிய வந்தது.
இதனிடையே கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புகைப்படக்கலைஞர் ஜோசப் தற்கொலை செய்து கொண்டது அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.