ரஜினி குறித்து அவதூறு: தவெகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக...
அரசியலைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படும் திரை ஆளுமையான ரஜினிகாந்த் குறித்து தவெக தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அவதூறாகப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
Advertisement
Advertisement
அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மாவின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை.
அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்'' எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். அவரின் இத்தகையப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Defamation against Rajini Edappadi palaniswamy condemns TVK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.