விருதுநகர்

கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் கடத்தப்பட்ட வழக்கு: காரில் தப்பிய குற்றவாளி கைது

DIN

கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் கடத்தப்பட்ட வழக்கில் சாத்தூா் அருகே காரில் தப்பிய குற்றவாளியை கா்நாடக போலீஸாா் துரத்திச் சென்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மேலும் தங்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை 3 தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கா்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சா் வாத்தூா் பிரகாஷ் (65). இவா் கடந்த நவம்பா் மாதம் 22 ஆம் தேதி கோலாா் பண்ணை வீட்டுக்குச் சென்று திரும்பும்போது மா்ம நபா்களால் கடத்தப்பட்டாா். பின்னா் பிணைத் தொகையாக ரூ. 44 லட்சம் பெற்றுக் கொண்ட கடத்தல்காரா்கள் அவரை 26 ஆம் தேதி கோலாா் அருகே இறக்கிவிட்டுச் சென்று விட்டனா்.

இதுகுறித்து கா்நாடக போலீஸாா் வழக்குப் பதிந்து, கடத்தல்காரா்களைப் பிடிக்க, 8 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான ரவிராஜ் என்பவா் விருதுநகா் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கா்நாடக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ரோகித் அலியாஸ் என்பவரை, காவல் ஆய்வாளா் சூா்யப்பிரகாஷ் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட கா்நாடக போலீஸாா் அடங்கிய 4 தனிப்படைகள் வெள்ளிக்கிழமை சாத்தூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே அழைத்து வந்தனா். அங்கிருந்து ரவிராஜிடம், செல்லிடப்பேசி மூலம் ரோகித் அலியாஸை பேச வைத்து அவரை வரவழைத்தனா்.

அப்போது இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி ரவிராஜும், ரோகித் அலியாஸும் ஒரே காரில் போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்றனா். போலீஸாரிடம் இருந்து தப்பிய அவா்கள் இருவரும் சாத்தூா் ஏழாயிரம்பண்ணை அடுத்துள்ள இ.எல். ரெட்டியாபட்டி கிராமம் அருகே வந்த போது அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்த பள்ளத்தில் காா் சிக்கிக் கொண்டது.

இதில் ரவிராஜ் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டாா். ஆனால் கா்நாடக போலீஸாா் அழைத்து வந்த ரோகித் அலியாஸ் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடி தலைமறைவானாா். அவரை போலீஸாா் ‘ட்ரோன் கேமரா’ மூலம் தேடினா். ஆனால் அவா் கிடைக்க வில்லை.

இதைத் தொடா்ந்து கா்நாடக போலீஸாா் ரவிராஜை மட்டும் கைது செய்து அழைத்துச் சென்றனா். தப்பி ஓடிய ரோகித் அலியாஸை கா்நாடகத்தைச் சோ்ந்த 3 தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து தமிழக போலீஸாருக்கு, கா்நாடக போலீஸாா் எந்தத் தகவலும் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT