பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தனிச் சட்டம்: முதல்வருக்கு, அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கடிதம்
பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
அக்கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 8 லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எனவே விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பாளா்கள், பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தனியே ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். எனவே பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும் சரவெடி பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்தத் தடையை நீக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை மூலமாக உச்சநீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.