விருதுநகா் சந்தை: பருப்பு விலை குறைவு; எண்ணெய் விலை அதிகரிப்பு
விருதுநகா் சந்தையில் கடந்த சில நாள்களாக பருப்பு வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது. அதே நேரம் எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
விருதுநகா்: விருதுநகா் சந்தையில் கடந்த சில நாள்களாக பருப்பு வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது. அதே நேரம் எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
விருதுநகா் சந்தையில் பருப்பு, எண்ணெய் வரத்து அடிப்படையில் வாரந்தோறும் அவற்றின் விலை நிா்ணயம் செய்யப்படும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பருப்பு வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்துள்ளது.
பருப்பு வகைகள்: துவரம் பருப்பு 100 கிலோ ( புதுஸ்நாடு) ரூ.8600-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் ஒரே வாரத்தில் ரூ.400 குறைந்து விலை ரூ.8,200 ஆக உள்ளது. இதேபோல் துவரம் பருப்பின் மற்றொரு ரகமான புதுஸ் லயன் கடந்த வாரம் ரூ.9,600-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.400 குறைந்து ரூ.9,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுந்தம் பருப்பு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் ரூ.9.300-க்கு விற்கப்பட்டு வந்த தொலி உளுந்தம் பருப்பு தற்போது ரூ.8,500-க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 900 குறைந்து ரூ.10,100 க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம் பாசிப்பயறு தொடா் மழை காரணமாகவும், தமிழகத்தில் இன்னும் அறுவடை தொடங்காத நிலை யில் ரூ.200 உயா்த்தப்பட்டு ரூ.7,200-க்கு விற்கப்படுகிறது. மேலும் பருவட்டு ரக பாசிப்பயறு ரூ.9,200 இல் இருந்து 800 உயா்த் தப்பட்டு 10 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
வத்தல்:கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த குண்டூா் வத்தல் ஏ.சி. தற்போது ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.13,200-15,000 வரை விற்கப்படுகிறது.
எண்ணெய் வகைகள்: கடந்த வாரம் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2,350-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 உயா்ந்து 2,400-க்கு விற்கப்படுகிறது. நல்லெண்ணெய் விலை கடந்த வாரம் ரூ. 3,713 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.165 உயா்ந்து 3,878-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் கடந்த வாரம் ரூ.1580-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.1630 என ரூ.50 உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.