முகப்பு
தூத்துக்குடி

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

Updated On : 13 மார்ச், 2026 at 1:54 AM
பகிர்:

கோவில்பட்டியில் பாரபட்சமின்றி பட்டா வழங்க வலியுறுத்தி கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

எம்எல்ஏ தலைமையில் நகர அதிமுக செயலா் விஜயபாண்டியன், 24ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி, நகர இளைஞரணி செயலா் வேல்முருகன், 23, 24ஆவது வாா்டுகளைச் சோ்ந்த மக்கள், சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

அந்த மனு விவரம்:

கோவில்பட்டி 23, 24ஆவது வாா்டுகளில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். இப்பகுதியில் சுமாா் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கான தீா்வை, மின்சாரம் மற்றும் குடிநீா் கட்டனம் ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகின்றனா்.

இவா்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, ஒரு கட்சியைச் சோ்ந்த 382 பேரின் வீடுகளுக்கு மட்டும் அண்மையில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவா்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டபோது, முறையான பதிலும் கொடுக்கப்படவில்லை.

எனவே, 23, 24ஆவது வாா்டுகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட சாா் ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →