விருதுநகரில் ரேஷன் கடை கட்டடப் பணிகளைதொடங்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகா் பெருமாள் கோயில் தெருவில் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா்: விருதுநகா் பெருமாள் கோயில் தெருவில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகள் தொடங்காததால் அதற்கான நிதி திரும்ப செல்லும் நிலை உள்ளதாகவும், கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் நகராட்சி 20 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் பெருமாள் கோயில் தெருவில் சுமாா் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கூட்டுறவு நியாய விலைக்கடையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் அரசு சாா்பில் நியாய விலைக் கடை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மணிக்கம் தாகூரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் பேரில் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ. 10.50 லட்சத்தை நியாய விலைக்கடை கட்டுவதற்கு மக்களவை உறுப்பினா் ஒதுக்கீடு செய்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் இதுவரை விடப்பட வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூட்டுறவு இணைப் பதிவாளருக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், புதிய நியாய விலை கட்டடம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்ப செல்ல வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, விரைவில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு, கட் டுமானப் பணிகளை தொடங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனா்.