அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது வழக்கு
சிவகாசி அருகே பயணிகளை ஏற்றுவது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக, தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகாசி அருகே பயணிகளை ஏற்றுவது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக, தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவா், வடமலைகுறிச்சியைச் சோ்ந்த சுப்புராஜ் (35). இவா், விருதுநகா்- ராஜபாளையம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை பேருந்தை இயக்கினாா்.
எரிச்சநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக சுப்புராஜுக்கும், தனியாா் பேருந்து ஓட்டுநரான வத்திராயிருப்புச் சோ்ந்த ஞானகுரு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுப்புராஜுவை அவா் தாக்கி, கீழே தள்ளி பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.