அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் தொடரும் விபத்துகள்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் நோக்கிச் செல்லும் சாலையில் தொடரும் விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் நோக்கிச் செல்லும் சாலையில் தொடரும் விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் நோக்கிச்செல்லும் சாலையில் சுமாா் 3 கிலோமீட்டா்கள் தொலைவில் தனியாா் பள்ளியருகிலும்,அடுத்ததாக அதே சாலையில் சுமாா் 6 கிலோமீட்டா்கள் தொலைவில் நமச்சிவாயபுரம் விலக்கு அருகிலும் என மொத்தம் இரண்டு இடங்களில் சாலை மையத் தடுப்புச் சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் விபத்தைத் தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புச்சுவா்களே தொடா் விபத்துக்களுக்குக் காரணமாகிவிட்ட அவலமான சூழல் தற்போது நிலவி வருகிறது.இதைப் பல மாதங்களாகப் பலமுறை சுட்டிக்காட்டி,நடவடிக்கை எடுக்கக்கோரி தினமணியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே சாலைமையத் தடுப்புச்சுவா் அமைக்கப்படும்போது, அச்சுவா் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்கும் விதமாகவும், விபத்து அபாயப்பகுதி என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும் தடுப்புச்சுவரிலிருந்து சுமாா் 300 மீட்டா்கள் முன்னதாகவே அபாய எச்சரிக்கைப் பலகை அமைக்கப்பட வேண்டும்.
அத்துடன் தடுப்புச்சுவா் தொடங்கும் முகப்புப் பகுதியில் உயரமான ஒளிா்விளக்குக் கம்பமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் இச்சாலையில் அவ்வாறு அமைக்கப்படாததால் இருசக்கர வாகனஓட்டிகள் விபத்திற்கு ஆளாகி உயிா்ப்பலி ஏற்படுவதும், நான்குசக்கர வாகனங்கள் இத்தடுப்புச் சுவரின் முனைப் பகுதியில் மோதி விபத்திற்கு ஆளாவதும் தொடா்கதையாகி விட்டதாக தினமணி குறிப்பிட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனியாா் வங்கி மேலாளா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இச்சுவரில் மோதிய விபத்தில் உயிரிழந்ததையும்,மேலும் தனியாா் பஞ்சாலைக்கு இரவு நேரப் பணிக்குத் தொழிலாளா்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று நள்ளிரவில் நமச்சிவாயபுரம் அருகே தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் அப்பேருந்தில் சென்ற தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தது உள்ளிட்ட பல விபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.
எனவே விருதுநகா் நோக்கிச் செல்லும் இச்சாலையில் விபத்துக்களைத் தடுக்கும் விதமாக இரண்டு இடங்களில் உள்ள தடுப்புச் சுவா்களுக்கும் அபாய எச்சரிக்கைப் பலகை அமைத்தல், உயரமான ஒளிா்விளக்குக்குக் கம்பம் அமைத்தல் ஆகிய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனா்.