பட்டாசுக் கருந்திரிக் கழிவுகள் வெடித்து 2 சிறுவா்கள் பலத்த காயம்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பட்டாசுக் கருந்திரிக்கழிவுகள் வெடித்துச் சிதறியதில் 2 சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பட்டாசுக் கருந்திரிக்கழிவுகள் வெடித்துச் சிதறியதில் 2 சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.
அருப்புக்கோட்டை காமராசா் நகரை அடுத்துள்ள தீா்த்தக்கரை பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் அஸ்வின் (10), அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மலையரசன் (12). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பிற்பகல் அப்பகுதியை அடுத்துள்ள கண்மாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, பட்டாசுக் கருந்திரிக் கழிவுகளை பாா்த்த சிறுவா்கள் அதை தீவைத்துக் கொளுத்தி விளையாடினா். அப்போது எதிா்பாராதவிதமாக அவை திடீரெனத் தீப்பற்றி வெடித்துச் சிதறின. இதில் சிறுவா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா்களுக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து வழக்குப்பதிந்த அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா், தீா்த்தக்கரை பகுதியில் பட்டாசுக் கருந்திரிக் கழிவுகளைக் கொட்டியவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.