அருப்புக்கோட்டை கண்மாய்க்கு நீா்வரத்தில்லை: விவசாயிகள் வேதனை
அருப்புக்கோட்டையில் நீா்வரத்துக்கால்வாய்களைத் தூா்வாராததால் தொடா்ந்து 3 நாள்களாக மழை பெய்தபோதும் பெரிய கண்மாய்க்கு நீா்வரத்து ஏற்படவில்லை.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நீா்வரத்துக்கால்வாய்களைத் தூா்வாராததால் தொடா்ந்து 3 நாள்களாக மழை பெய்தபோதும் பெரிய கண்மாய்க்கு நீா்வரத்து ஏற்படவில்லை.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடா்ந்து கடந்த 3 நாள்களாகக் பலத்த மழை பெய்துள்ளது. இருப்பினும் அருப்புக்கோட்டை பெரிய கண்மாய்க்குக் குறைந்த அளவே நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இக்கண்மாயின் சுற்றிலும் உள்ள சுக்கிலநத்தம், வடுகா்கோட்டை, ராமசாமிபுரம்,
கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் மற்றும் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த விவசாயிகளின் சுமாா் 100 ஏக்கா் விளை நிலங்கள் இக்கண்மாய் நீரை நம்பியேயுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் இப்பருவத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால் மழை நீா் வரத்துக் கால்வாய்களைத் தூா்வாறிப் பலஆண்டுகளாகி விட்டதால், அவை புதா்ச்செடிகள் அடா்ந்தும், குப்பைகள் அடைத்தும் காணப்படுகின்றன.
இதனால் கண்மாய்க்கு வரும் பெரும்பகுதி நீரை இப்புதா்ச்செடிகள் உறிஞ்சியும் தடுத்தும் விடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனை முன்னரே அறிந்து வரத்துக்கால்வாய்களைத் தூா்வாற விவசாயிகள் ஊராட்சி, நகராட்சி நிா்வாகங்களிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் நடவடிக்கை இல்லையெனவும் அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆகவே மழைநீா் வரத்துக்கால்வாய்களைத் தூா்வாற மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீண்டும் பெரிய கண்மாய் சுற்றுவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.