தொடர்ந்து 3 நாட்கள் கனமழை: கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனை
அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்குப் பின்னரும் பெரிய கண்மாயில் குறைந்த அளவு நீர்வரத்தே ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்குப் பின்னரும் பெரிய கண்மாயில் குறைந்த அளவு நீர்வரத்தே ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாகப் பெய்த கனமழைக்குப் பின்னரும் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததால், அக்கண்மாய் நீரை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாகக் கனமழை பெய்துள்ளது. இருப்பினும் பெரியகண்மாய்க்குக் குறைந்த அளவே நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இக்கண்மாயின் சுற்றுவட்டாப் பகுதிகளில் உள்ள சுக்கிலநத்தம், வடுகர்கோட்டை, ராமசாமிபுரம், கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 100 ஏக்கரைச் சேர்ந்த விவசாயிகள் இக்கண்மாய் நீரை நம்பியே பாசனம் செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் இப்பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் மழை நீரை அறுவடை செய்யும்விதமாக , வரத்துக் கால்வாய்களைத் தூர்வாறிப் பலஆண்டுகளாகி விட்டதால், அனைத்து மழைநீர் வரத்துக் கால்வாய்களும் புதர்ச்செடிகள் அடர்ந்தும், குப்பைகள் அடைத்தும் காணப்படுகின்றன.
இதனால் கண்மாய்க்கு வரும் பெரும்பகுதி நீரை இப்புதர்ச்செடிகள் உறிஞ்சியும் தடுத்தும் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை முன்னரே அறிந்து வரத்துக் கால்வாய்களைத் தூர்வாற விவசாயிகள் ஊராட்சி, நகராட்சி நிர்வாகங்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆகவே மழைநீர் வரத்துக் கால்வாய்களைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெரியகண்மாய் சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.