வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: ஸ்ரீவிலி. அருகே தீவாக மாறிய கிராமம்
ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் ஒரு கிராம மக்கள் வெளியே செல்ல இயலாமல் தவித்து வருகிறார்கள்.
ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் ஒரு கிராம மக்கள் வெளியே செல்ல இயலாமல் தவித்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் பண்ணை-தோப்பூர் உள்ளது. இங்கு சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் அன்றாட வேலைக்கு இக்கிராமத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் பிரதான சாலையிலிருக்கும் மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியை ஓட்டியுள்ள கொத்தங்குளம் சாலையில் பயணித்து தங்களது வாகனங்களில் செல்வார்கள். இந்தச் சாலையில் 15 க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகள் உள்ளன. 4 மில்களைச் சேர்ந்தவர்கள் நீர்வரத்துப் பாதையை மண் கொண்டு மூடி, ஆலையின் நுழைவு வாயில்களை அமைத்து, ஆலையில் வாகனங்கள் உள்ளே செல்ல பாதைகள் அமைத்துள்ளார்கள்.
மேலும் ஆலையில் கழிவுகள் நீர் வரத்துப் பாதையில் கொட்டப்பட்டுள்ளது. தற்போது படிக்காசுவைத்தான்பட்டி கண்மாய் நிறைந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நீர் செல்ல இயலாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பண்ணை-தோப்பூரைச் சேர்ந்தவர்கள் இந்தச் சாலையின் வழியே எங்கும் செல்ல இயலாத நிலை உள்ளது. இப் பகுதியில் உள்ள மில்களில் பணிபுரியும் தொழிலாளர் குழந்தைகள் பண்ணை-தோப்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்து படித்துச் செல்கிறார்கள். தற்போது நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இவர்களால் பள்ளிக்கு வர இயலவில்லை.
மேலும் இக் கிராமத்திலிருந்து வன்னியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு உயர்நிலைப் பள்ளி செல்ல மற்றும் மருத்துவமனைக்கு செல்ல படிக்காசுவைத்தான்பட்டி சாலையின் வழியே செல்வார்கள். தற்போது இச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பெருமளவு நீர் தேங்கியுள்ளதால் இப் பகுதி வழியே மருத்துவமனைக்கோ, உயர்நிலைப் பள்ளிக்கோ செல்ல இயலாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். கண்மாய் கரை வழியே வெளியிடங்களுக்குச் செல்ல இயலாத நிலையில் கரை சேதமடைந்துள்ளதால் அவ் வழியேயும் வெளியே செல்ல இயலாதா நிலை உள்ளது.
இது குறித்து பண்ணை-தோப்பூர் கிராமத்தின் தலைவர் குருவையா, செயலாளர் குருபுத்திரன் ஆகியோர் திங்கள்கிழமை கூறியதாவது: படிக்காசுவைத்தான்பட்டி கண்மாய்க்கு வாழைக்குளம், இடையன்குளம் கண்மாய்கள் நிறைந்து நீர் வருகிறது. தற்போதுபடிக்காசுவைத்தான்பட்டி கண்மாய் நிறைந்ததையடுத்து இரண்டு கலிங்கல் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் பிள்ளையார்குளம், கொத்தங்குளம் கண்மாய்களுக்குச் செல்லும். நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் ஆலையின் கழிவுகள் நீர் வரத்துப் பாதையில் கொட்டப்பட்டுள்ளதாலும், மஞ்சம்மாள் பாலிடெக்னிக்கிலிருந்து தோப்பூர்-பண்ணை வரும் கொத்தங்குளம் சாலை வழியே இந்த நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கிராமம் நான்கு பக்கமும் நீர் சூழ்ந்து தீவு போல உள்ளது. அவசர மருத்துவ தேவைக்கு கூட வெளியே செல்ல இயலவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்வையிட்டு, தண்ணீர் வற்றியவுடன் இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் அமைத்துத் தருவதாயும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மிகவும் சேதமுற்றுள்ள இந்தச் சாலையை புதிய தார்ச்சாலையாக அமைத்துத் தருவதாயும் உறுதியளித்தனர். தற்போது நீர் வரத்து அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.