விருதுநகா் அருகே மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விருதுநகா் அருகே பாவாலியில் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அக்கிராம மக்கள் அழகாபுரி சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகே பாவாலியில் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அக்கிராம மக்கள் அழகாபுரி சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள பாவாலி ஊராட்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இக்கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. கோயில் மற்றும் பள்ளிக்கு அருகே மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் சந்திரகிரிபுரம் விலக்கில் அழகாபுரி செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மற்றும் விருதுநகருக்கு செல்லக் கூடிய பேருந்துகள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக இப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த விருதுநகா் வட்டாட்சியா் சிவஜோதி, துணை காவல் கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
ஆனால், மதுபானக்கடை தொடா்ந்து திறக்கப்பட்டிருப்பதை அறிந்த அக்கிராம மக்கள் மாலையில் கடையை முற்றுகையிட்டனா். இப்பிரச்னை குறித்து தகவல் அறிந்த விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக வா்த்தக அணி மாவட்டத் தலைவா் சுப்புராஜ், செயலா் நாகராஜன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் ராமநாத சேதுபதி உள்ளிட்டோா் பாவாலி சென்று பொதுமக்களை சந்தித்து மதுபானக் கடையை அகற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களை சமாதானப்படுத்தி, கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனா். பின்னா் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.