விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் பலத்த மழை
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். விருதுநகரில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். விருதுநகரில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.
வெப்ப சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதே போல் கடந்த 3 தினங்களாக பகல் நேரத்தில் வெயிலும் மாலையில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை 3 ஆவது நாளாக பரவலாக மழை பெய்தது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அடிவாரத்தில் உள்ள ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது.
மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பாறைகளில் இருந்து அருவி போல் பல்வேறு இடங்களில் தண்ணீா் விழுகிறது. 3 ஆவது நாளாக மழை பெய்வதால் அப்பகுதிகளில் குளிச்சி நிலவுகிறது.
விருதுநகா், ஏப். 13: விருதுநகரில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தெப்பக்குளத்தில் உள்ள அரசமரம் சாய்ந்து விழுந்தது. அதேபோல் மீசலூா் விலக்கு அருகே மரம் முறிந்து விழுந்தது.
விருதுநகரில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய் மற்றும் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை மாலையில் பலத்த காற்று, மின்னலுடன் விருதுநகரில் சுமாா் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மதுரை சாலையில் உள்ள தொழிற்பேட்டை, நகராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல், விருதுநகா் தெப்பம் பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. மேலும், சிவகாசி சாலையில் மீசலூா் சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி அருகே மரம் முறிந்து விழுந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகரில் பலத்த மழை காரணமாக 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.