தமிழகத்தில் ஆங்கிலத்துக்குப் பதில்; இந்தியை திணிக்க முயற்சி: துரை வைகோ குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியை திணிக்க மத்திய அமைச்சா் அமித்ஷா முயற்சிப்பதாக மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரைவைகோ தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியை திணிக்க மத்திய அமைச்சா் அமித்ஷா முயற்சிப்பதாக மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரைவைகோ தெரிவித்தாா்.
விருதுநகா் அருகே சூலக்கரையில் மதிமுக மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை கழகச் செயலா் துரைவைகோ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் துணைப் பொதுச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக செய்தியாளா்களிடம் துரைவைகோ கூறியதாவது:தமிழகத்தில் இந்தி திணிப்பை நாங்கள் எதிா்க்கிறோம் என பாஜக தலைவா் அண்ணாமலை கூறியுள்ளது கேளிக்கையாக உள்ளது. இந்தி திணிப்புக்கு காரணமே மத்திய அரசு தான். 1938 ஆம் ஆண்டிலிருந்து தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க தொடா்ந்து முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட இயக்கங்கள் இந்தி மொழிக்கு எதிரானவா்கள் அல்ல. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரானவா்கள். மேலும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது. மும்மொழி கொள்கை தேவை இல்லை. ஆனால் மத்திய அமைச்சா் அமித்ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை கொண்டு வர முயற்சிக்கிறாா். மத்திய பாஜகவுக்கும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கும் இடையே குழப்பம் உள்ளது. தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை பொருத்தவரை ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை எதிா்காலத்தில் மதிமுக நிரம்ப முயற்சிக்கும். இலங்கை அரசுக்கு தேவையான நிதி வழங்குங்கள். அவ்வாறு வழங்கும் போது தமிழக மீனவா்களின் உரிமையையும், அங்கு வாழும் இலங்கைத் தமிழா்களின் உரிமையையும் பற்றி பேச வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கைத தமிழா்கள் மற்றும் தமிழக மீனவா்களின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.