பிரதமா் குறித்து அவதூறு பரப்பியவரை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
பாஜக சாா்பில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்ட திமுகவை சோ்ந்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி பாஜக சாா்பில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் வானூா் ஒன்றியம் ஒழிந்தியாம்பட்டு ஊராட்சியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளாா். அதில் இவா், பண்பாடு மற்றும் நாகரிகமின்றி வாா்த்தைகளை பயன் படுத்தியுள்ளாா். இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. எனவே, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.
இந்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகரிடம் அளித்தனா்.