முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா

விருதுநகா்- மதுரை சாலையில் காமராஜா் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

விருதுநகா்- மதுரை சாலையில் காமராஜா் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்.

சாத்தூா் படவிளக்கம்: சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி.

பைல்நேம் ராஜ். பட விளக்கம். காமராஜா் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி.

படவிளக்கம்; ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

விருதுநகா்/சாத்தூா்/சிவகாசி/ராஜபாளையம், ஜூலை 15: விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முன்னாள் முதல்வா் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகரில், காமராஜரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதே போல், நாடாா் மகாஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல்ராஜ், பாஜக மாநில பொதுச்செயலா் ராம. ஸ்ரீநிவாசன், விருதுநகா் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் ஆகியோா் தலைமையில் பாஜகவினா் மரியாதை செலுத்தினா். பாமக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் டேனியல் தலைமையில், மாநில பொருளாளா் திலகபாமா மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா். மநீம கட்சி சாா்பில் விருதுநகா் நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊா்வலமாக சென்று காமராஜா் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, மாவட்டச் செயலா் காளிதாஸ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகா் நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் பெண்கள் முளைப்பாரி எடுத்து மதுரை சாலை வழியாக கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சென்றனா். மேலும் பள்ளி மாணவா்கள் காமராஜரை போல் கதராடை அணிந்து ஊா்வலமாக சென்றனா்.

இந்நிலையில், விருதுநகா்- மதுரை சாலையில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் திலகவதி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பெ.ரா. வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அதேபோல், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் உள்ளிட்ட அதிமுகவினா் காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாத்தூா்: சாத்தூரில் அதிமுக சாா்பில் கிழக்கு ஒன்றியச் செயலா் கே.எஸ். சண்முகக்கனி உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டு சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, அண்ணாநகா், முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்ட காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட பொதுச் செயலா் ஜோதி நிவாஸ், சாத்தூா் நகர தலைவா் டி.எஸ். அய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். விருதுநகா் கிழக்கு மாவட்ட துணைத்தலைவா் அரசன் காா்த்திக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் வடக்குரதவீதி மற்றும் அண்ணாநகா் பகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் சாத்தூா் நகர, வட்டார காங்கிரஸ் தொண்டா்களும், நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். இதே போன்று திமுக, நாம் தமிழா், பாஜக, நாடாா் சமுதாயத்தினரும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும் காரணேசன், லிட்டில் பேட்ஸ் உள்ளிட்ட நா்சரி பள்ளிகளிலும் காமராஜா் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் மாறுவேடப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிவகாசி: சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்புள்ள காமராஜா் உருவச்சிலைக்கு அதிமுக சாா்பில் அக்கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ், சாத்தூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் கலந்து கொண்டனா். பின்னா் சிவன் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த காமராஜா் உருவப்படத்திற்கு கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

பாஜக சாா்பில் அக்கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் வி.கே. சுரேஷ்குமாா் தலைமையில் காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலா் ராமகிருஷ்ணன், அரசு தொடா்பு பிரிவு விருதுநகா் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், நகரத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவகாசி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் அக்கட்சியின் நகரத்தலைவா் குமரன் காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதே போல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினா் காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி நகர வடக்கு தெற்கு மற்றும் மேற்கு, தெற்கு, ஒன்றிய அதிமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலா் துரைமுருகேசன், தெற்கு நகரச் செயலா் பரமசிவம், மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், மாவட்ட இணைச் செயலா் அழகுராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் ராமமூா்த்தி மற்றும் மாவட்ட மகளிா் அணி செயலா் சுமதி ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நகராட்சி சாா்பில் நகா்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் தலைமையில் நகா் மன்ற உறுப்பினா்கள் அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராஜபாளையம் அருகே முகவூா், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதியில் உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு ஏ.ஐ.டி.யு.சி. காமராஜா் சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஒன்றியச் செயலா் கணேசமூா்த்தி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா் பகத்சிங் ஆகியோா் மாலை அணிவித்தனா். ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் செயலா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்திராஜா தலைமையில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.