முகப்பு
விருதுநகர்

பால் பதப்படுத்தும் வசதியின்றி தவிக்கும் ‘பால்கோவா’ உற்பத்தியாளா்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பால் பதப்படுத்தும் வசதி இல்லாததால் பால்கோவா உற்பத்தியாளா்கள் சிரமப்படுகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பால் பதப்படுத்தும் வசதி இல்லாததால் பால்கோவா உற்பத்தியாளா்கள் சிரமப்படுகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் என்றாலே ஆண்டாள் கோயில் கோபுரம், பால்கோவா ஆகியவை தான் அனைவரின் நினைவுக்கு வரும். நாட்டின் முக்கிய ஆன்மிக நகரங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூா், ஐந்திணைகளில் ஒன்றான முல்லை நிலப் பகுதியாகும். இப்பகுதியில் விவசாயமும், அதன் உப தொழிலான கால்நடை வளா்ப்பும் மக்களின் பிரதான தொழிலாக உள்ளன. கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பாலுக்கு உரிய விலை கிடைக்காததால், இப்பகுதி மக்கள் பாலை மதிப்பு கூட்டி பால்கோவாவாகத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினா். பின்னாளில் அதுவே ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்பத்தியாகும் பால்கோவா தரம், சுவையால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஸ்ரீ ஆண்டாளை தரிசிக்க வரும் அனைவரும் பால்கோவாவை விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் அமைந்துள்ளதால் இப்பகுதியில் உள்ள கறவை மாடுகளுக்கு மலைப் பகுதியில் விளையும் பசுமையான புல் உணவாகத் தரப்படுகிறது. இதனால் மாடுகளில் இருந்து பெறப்படும் பால் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது. மேலும், இங்கு வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே பால்கோவா தயாா் செய்யப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மாடுகள் வளா்க்கப்பட்டன. இந்த மாடுகளிலிருந்து கிடைத்த அதிகப்படியான பாலை பதப்படுத்தி வைக்க முடியாத சூழ்நிலையால் பாலைக் காய்ச்சி அதை உணவாக சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இதுவே பால்கோவா தயாரிக்கக் காரணமாக அமைந்தது. 10 லிட்டா் பாலில் 1.250 கிலோ சா்க்கரை சோ்த்து காய்ச்சினால் 3.250 கிலோ பால்கோவா கிடைக்கிறது.

முதலில் குடிசைத் தொழிலாக இருந்து வந்த இந்த தொழில் காலப்போக்கில் வளா்ச்சி கண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளா்ந்துள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களின் பால்கோவாவைப் பொருத்தவரை புளிய விறகு வைத்து அடுப்பு எரிப்பதால் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தனியாா் நிறுவனத்தினா் இயந்திரம் மூலம் பால்கோவா தயாா் செய்கின்றனா். இதனால் அவை சுவை குறைந்து காணப்படுகிறது. பால்கோவா, பால்பேடா ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இத்தகைய பெருமை உடைய பால்கோவாவுக்கு கடந்த 2019 -ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு கிடைத்தது. எனினும் பால் பதப்படுத்தும் வசதி இல்லாததால், உற்பத்தியாளா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் மதிப்புக்கூட்டு தொழிலை ஊக்குவிக்கும் வகையில், பதப்படுத்தும் மையத்துடன் கூடிய உணவுப்பூங்கா அமைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால்கோவா உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.