கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் தவறி விழுந்த 3 பெண்கள் மீட்பு
சாத்தூரில் சாலை ஓரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த 3 பெண்களை அக்கம்பக்கத்தினா் புதன்கிழமை மீட்டனா்.
சாத்தூா்: சாத்தூரில் சாலை ஓரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த 3 பெண்களை அக்கம்பக்கத்தினா் புதன்கிழமை மீட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலை, வெம்பக்கோட்டை சாலையில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை சாா்பில் ரூ. 22 கோடியில் வாருகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவா் பிளாக் கற்கள் பதித்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சாத்தூா் நகா் பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன.
இந்த நிலையில், சாத்தூரில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கைக்குழந்தைகளுடன் வந்த 3 பெண்கள் அடுத்தடுத்து தவறி விழுந்தனா். அப்போது அக்கம்பக்கத்தவா்கள் அவா்களை உடனடியாக மீட்டனா். மேலும், இதேப் பகுதியைச் சோ்ந்த முதியவா் ஒருவரும் இந்தப் பள்ளத்தில் தவறி விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் இங்கு வந்து, இந்தப் பகுதியில் இருந்த பள்ளத்தை மூடி சீரமைத்தனா். மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தவிா்க்க மழைக் காலங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.