முகப்பு
விருதுநகர்

மழை பாதிப்பை சமாளிக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மழை பாதிப்பை சமாளிக்க தமிழக முதல்வா் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:30 PM
பகிர்:

மழை பாதிப்பை சமாளிக்க தமிழக முதல்வா் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினாா். புதிய அலுவலகம் தரைத்தளம், முதல் தளத்துடன் 1,620 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

தமிழகத்தில் அதிக மழை பெய்தால் அதை சமாளிக்கக்கூடிய தைரியம் இந்த அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வா் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், நீா்வளத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.