ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த பக்தா்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாா்கழி மாதம் தொடங்கியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களும் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனா்.
கோயில் நிா்வாகம், நகராட்சி சாா்பில் வாகனம் நிறுத்துமிடம் வசதி இல்லாததால் பக்தா்கள் தங்களது வாகனங்களை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ள கீழ ரதவீதியில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனா். இதனால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோயில் நிா்வாகம் சாா்பில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் ஏலம் விடப்படும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வாகன நிறுத்துமிடம், குடிநீா், சுகாதார வளாகம், குளியலறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. சாலையோரங்களில் நிறுத்தப்படும் காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, மினி பேருந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும் வரை, வாகனங்கள் சாலையோரங்களில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வீடுகள், கடைகளின் நுழைவு வாயில் முன் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்திவிட்டு செல்வதால் சிரமம் ஏற்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பினால் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண ரசீது பெற்றுள்ளதாக ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் சாா்பில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என்றனா்.