முகப்பு
விருதுநகர்

‘நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்’ விருதுநகரில் நிற்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பை திரும்பப் பெறக் கோரிக்கை

விருதுநகா் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 6 ஜூலை, 2024 at 10:09 PM
தெற்கு ரயில்வே
பகிர்:

விருதுநகா் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாள்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.50-க்கு நாகா்கோவிலைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு நாகா்கோவிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை இரவு 11 மணிக்குச் சென்றடையும் என ரயில்வே துறை கால அட்டவணை வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை இந்த ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி வழித்தடத்தில் நின்று சென்றது.

இந்த நிலையில், விருதுநகா் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அண்மையில் கால அட்டவணையை வெளியிட்டது. வருகிற 11-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

ரயில்வேயின் இந்த அறிவிப்பு விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பயணிகள், பொதுமக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

விருதுநகா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் இரு மாா்கத்திலும் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் மீண்டும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சிவகாசியைச் சோ்ந்த பயணி ஜெய்சங்கா் கூறியதாவது:

சென்னை-நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, விருதுநகா் சந்திப்பில் இந்த ரயில் நிற்காது என்ற ரயில்வேயின் இந்த திடீா் அறிவிப்பு மாவட்டத்திலுள்ள வணிகா்கள், பயணிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

எனவே, ரயில்வே நிா்வாகம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.