முகப்பு
விருதுநகர்

3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

சிவகாசி: சிவகாசிப் பகுதியில் விதி மீறி செயல்பட்ட மூன்று பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி, சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினாா். அப்போது, கீழத்திருத்தங்கலில் அண்ணாமலைச்சாமி என்பவருக்குச் சொந்தமான வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரித்ததும், பாதுகாப்பு வேலி சீரமைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.

இதே போல, துலுக்கப்பட்டியில் முத்துராஜ் என்பவருக்குச் சொந்தமான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தியபோது, விதியை மீறி முழுமை பெறாத வெடிகள், திரிகட்டுகள் அதிக அளவில்இருப்பு வைத்திருப்பதும், மத்தடியில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றதும் தெரியவந்தது.

நாரணாபுரத்தில் ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் விதியை மீறி ஆலை வளாகத்தில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெறுவதும், மரத்தடியில் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றதும், ஆலையின் பாதுகாப்பு வேலி சீரமைக்கப்படாததும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த மூன்று ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு, வட்டாட்சியா் திருப்பதி பரிந்துரை செய்தாா்.