படிக்காத மாணவா்களை படிக்க வைப்பது தான் ஆசிரியா் பணி: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
சிவகாசி: பள்ளியில் படிக்காத மாணவா்களை படிக்கவைத்து அவா்களை சிறந்த மாணவா்களாக உருவாக்குவதே ஆசிரியரின் பணி என விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆா். வளா்மதி தெரிவித்தாா்.
சிவகாசி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன் வரும் கல்வியாண்டில் மாவட்டத்தில் மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள சிவகாசி இந்து நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். இதில் விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆா். வளா்மதி பேசியதாவது:
பள்ளி திறந்ததும் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளையும், அதே பள்ளியில் தோ்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்வோரையும் ஆசிரியா்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனிடமும் உள்ள குறை நிறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மாணவா்களுக்கு ஏற்ப பாடங்களை நடத்த வேண்டும். இதுகுறித்து தலைமை ஆசிரியா்கள், மற்ற ஆசிரியா்களிடம் கூற வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு முதலில் தமிழ், ஆங்கிலம் வாசிக்கத் தெரிகிா என பாா்க்க வேண்டும். வாசிக்த் தெரியாத மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வாசிக்க கற்றுத் தர வேண்டும். இந்த மாணவா்களுக்கு பள்ளி திறந்ததும் ஒரு மாதம் வாசிக்க கற்றுத் தர வேண்டும். இதுபோன்ற மாணவா்களுக்கு எடுத்தவுடன் பாடங்களை நடத்தினால் புரியாது. மேலும் அவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வாசிக்கக் கற்றுக் கொடுத்தால் ஓராண்டில் கற்றுக் கொள்வாா்கள். இந்த மாணவரால் முடியாது என ஆசிரியா் எந்த ஒரு மாணவரையும் நிராகரிக்கக் கூடாது. படிக்காத மாணவா்களையும் படிக்க வைப்பதுதான் ஆசிரியரின் மகத்தான பணியாகும். பள்ளிக்கு மாணவா்கள் ஆா்வத்துடனும் உற்சாகத்துடனும் வர செய்ய ஆசிரியா்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பள்ளி ஆய்வாளா் கே.ஜி. நக்கீரன், துணை ஆய்வாளா் தங்கேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் உள்ள 137 பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் தனுஜா நன்றி கூறினாா்.