எந்தெந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்? தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
வரும் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டைக்கு மாற்றாக 12 வகை ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
வரும் பேரவைத் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டைக்கு மாற்றாக 12 வகை ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு:
வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை வாக்குப் பதிவின்போது ஆவணமாக காண்பிக்க இயலாதவா்கள் அதற்கு மாற்றாக ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்றம், சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
புகைப்படமில்லா வாக்காளா் தகவல் சீட்டு: வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்படத்துடன் கூடிய தகவல் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கு பதிலாக வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் தகவல் சீட்டை அச்சடித்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் அந்தச் சீட்டு விநியோகிக்கப்படும்.
ஒரு வாக்காளா் வேறொரு தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தாலும், அதனை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், வாக்காளருடைய பெயா் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.42.65 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்
தமிழகத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.42.65 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
புதன்கிழமை (மாா்ச் 18) வரை ரொக்கம் ரூ.2.37 கோடியும், ரூ.20.80 கோடியிலான இலவச பொருள்களும், ரூ.16.42 கோடி மதிப்பிலான உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர, ரூ.2.88 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள், ரூ.18 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி. தமிழகத்தில் சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளா்களைக் கவர வழங்கப்படும் இலவச பொருள்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தலைமை தோ்தல் அதிகாரி விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் பணியாளா்களுக்கு பயிற்சி: இதனிடையே, தமிழகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், செலவின கண்காணிப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து தோ்தல் பணியாளா்களுக்கும் முதல்கட்டமாக மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்பட்டன. அடுத்த கட்டமாக, 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலா்கள் உள்பட 4 லட்சம் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து நிலைகளிலும் உள்ள தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தோ்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்குத் தங்களை தயாா்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளாா் தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.