முகப்பு
விருதுநகர்

மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: மகன் பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் மகன் பலி.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:29 PM
உயிரிழந்த சிறுவன் முஜித்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் மகன் பலியானார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள அருளாச்சி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் கணேசன் (36). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, மகன் முஜித் (இரண்டரை வயது). இந்த நிலையில், தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சங்கீதா கோபித்துக் கொண்டு வாசுதேவநல்லூருக்கு சென்றாா். அங்கு மகன் முஜித்துக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தானும் அவற்றை உள்கொண்டாா். பிறகு, அங்கிருந்து ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு வந்த அவா் மகனுடன் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றாா்.

அப்போது அங்கிருந்த ரயில்வே போலீஸாா் இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாரும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.