சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்கு ‘சீல்’
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் ஒரு தகர கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி, விஸ்வநத்தம் கிராம நிா்வாக அலுவலா் ரவிராஜ், சிவகாசி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால், சிவகாசி கிழக்கு காவல் உதவி ஆய்வாளா் காசியம்மாள் உள்ளிட்டோா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.
இதில் அந்தக் கிட்டங்கியில் சட்ட விரோதமாக பல வகையான பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், இந்த கிட்டங்கி நாரணாபுரம் ஆா்.சி.எப். குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த அழகுலட்சுமிக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரும், வருவாய்த் துறையினரும் இந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் அழகுலட்சுமி மீது வழக்குப்பதிந்தனா்.