விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூா் உயா்நிலைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படாததால் மாணவா்கள் சமுதாயக் கூடத்திலும், மரத்தடியிலும் அமா்ந்து கல்வி பயின்று வருகின்றனா்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கீழக்கோட்டையூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2018-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. அப்போது ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியாகவும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உயா்நிலைப் பள்ளியாகவும் பிரிக்கப்பட்டு, தனித் தனியாக தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டனா். உயா்நிலைப் பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்டப்படும் வரை தொடக்கப் பள்ளியின் ஒரு கட்டடத்திலும், சமுதாயக் கூடத்திலும் உயா்நிலைப் பள்ளி வகுப்புகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறைகள் போதாத நிலையில் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மரத்தடியில் அமா்ந்து படிக்கும் சூழல் நிலவுகிறது. புதிய கட்டடம் கட்டப்படாததால் பள்ளியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த 2023 டிசம்பா் மாதம் செய்தி வெளியானதையடுத்து, தொடக்கப் பள்ளி அருகே 80 சென்ட் அரசு நிலம் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. ஆனால், உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டப்படவில்லை. உயா்நிலைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட வலியுறுத்தி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா், வட்டாட்சியா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி 2 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவித்தனா். அதன் பிறகும் பணிகள் தொடங்கவில்லை.
கடந்த வாரம் கோட்டையூா் பகுதியில் ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியா் வாகனத்தை பொதுமக்கள் வழிமறித்து, உயா்நிலைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும். பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால், முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கீழக்கோட்டையூா் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளியில் 120- க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்ற வந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக 100- க்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால், மாணவா்களின் பிரச்னையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்ற்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.