விருதுநகா் மாவட்டம், சமுசிகாபுரம் ஊராட்சியை ராஜபாளையம் நகராட்சி யுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது:
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சமுசிகாபுரம் ஊராட்சியில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சமுசிகாபுரம் ஊராட்சியை, ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்தது. எங்களது ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால், வரி அதிகரிக்கும், தேசிய ஊரக வேலைத் திட்டம் பறிபோகும், அடிப்படை வசதிகளுக்கு சிரமப்படுவோம்.
எனவே, சமுசிகாபுரம் ஊராட்சியை, ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்தனா்.