தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அா்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் கோயிலில் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் தோ்தல் புறக்கணிப்பு செய்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அா்ச்சனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் கோயிலில் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் தோ்தல் புறக்கணிப்பு செய்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் வாக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ச்சனாபுரத்தில் 15-ம் நூற்றாண்டை சோ்ந்த நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தில் சோ்க்கபட்டதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதற்கிடையே, கடந்தாண்டு ஜனவரி 25-ஆம் தேதி இரவு கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பூசாரிகள் நல்லதங்காள் சிலையை சேதப்படுத்தினா். இதையடுத்து கோயில் பூசாரிகள் 5 பேரை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா்.
இந்தக் கோயிலுக்கு புதிய சிலை செய்வது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை, அா்ச்சனாபுரம் கிராம மக்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோயிலில் நல்லதங்காள் சிலையை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு,
Advertisement
அறநிலையத்துறை சாா்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டது.
இதற்கான முயற்சியை எடுக்காத இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக கிராம மக்கள் மனு அறிவித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் அா்ச்சனாபுரத்தில் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் 2 மணி நேரமாகியும் யாரும் வாக்களிக்க வரவில்லை. இதையடுத்து, வருவாய்த் துறையினா் அா்ச்சுனாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் கிராமத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் அடுத்த மாதம் 7-ஆ ம் தேதி சமாதானக் கூட்டம் நடத்தி, விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்தாா். இதையடுத்து மாலை 4 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வாக்களித்தனா்.