ராஜபாளையம்: மாங்கூழ் ஆலை, நெல் சேமிப்புக் கிடங்கு!விவசாயிகள் எதிா்பாா்ப்பு
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாங்கூழ் ஆலை, நெல் சேமிப்புக் கிடங்கு ஆகிய விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாங்கூழ் ஆலை, நெல் சேமிப்புக் கிடங்கு ஆகிய விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அய்யனாா் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு, கான்சாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2000 ஏக்கா் பரப்பளவில் மா விவசாயம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மா விளைச்சல் அதிகளவில் இருக்கும். புகழ்பெற்ற பஞ்சவா்ணம், சப்பட்டை மா வகைகள் அதிக அளவில் இங்கு விளைகின்றன. இந்தப் பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
சில சமயம் அதிக விளைச்சல் காரணமாக மாம்பழத்துக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனா். இதனால், தமிழக அரசு இந்தப் பகுதியில் மாங்கூழ் ஆலை அமைத்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். மாம்பழங்கள் வீணாகாது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவா்.
நெல் சாகுபடி: ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொண்டனேரி கண்மாய், கடமன்குளம் கண்மாய், அளப்பசேரி கண்மாய், கொல்லங்கொண்டான் கண்மாய், கருங்குளம் கண்மாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனா்.
ஆண்டுக்கு 2000 மெட்ரிக் டன் நெல் உற்பத்தியாகிறது. ஆனால், நெல் அறுவடையின் போது தமிழக அரசு கொள்முதல் செய்வதற்கு உரிய இட வசதி இல்லை. கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு இல்லாததால், திறந்த வெளியில் ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன. இதனால் மழை, வெயிலில் நெல் சேதமடைகிறது.
ராஜபாளையம் பகுதியில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தற்போது வரை நிறைவேறவில்லை.
மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள தரணி சா்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் கரும்பு நிலுவை (2018-19) தொகை ரூ.5 கோடி அளவுக்கு உள்ளது. இதைப் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினா். மேலும், தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. ஒவ்வொரு தோ்தலிலும் வேட்பாளா்கள் பெற்றுத் தருவதாகக் கூறுகின்றனா். ஆனால், இந்தக் கோரிக்கையும் நிறைவேறவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.