நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை
சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் அலுவலா்களின் ஊதியத்தை உயா்த்துவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் அலுவலா்களின் ஊதியத்தை உயா்த்துவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உணவுத் துறை சாா்பில் ஆய்வுசெய்து, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்யவும், அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சிப்பத்துக்கு ரூ. 40 இனி வாங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்குவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் டிகேஎம் 9 அரிசியை மக்கள் விரும்பவில்லை என்று மக்கள் பிரதிநிதிகள் கூறினா். இதனால், அந்த அரிசியை மக்களுக்கு வழங்கக் கூடாது என்றும், மக்கள் விரும்பும் அரிசியை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் சைலோ அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படுவதுபோல, தமிழகத்திலும் நெல் சேதமடையாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு முன்பாக பயன்பாடு இல்லாத அரசு கட்டடங்களில் நெல்லை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. மாநில அரசு உயா்த்தி வழங்குவது குறித்து முதல்வா் அறிவிப்பாா்.
வரும் குறுவை பருவத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து ரக நெல்லும் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.