ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாண விழா
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள திருவெண்ணீற்று உமையம்மை உடனாகிய சிவலோகத் தியாகராஜ சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண பெருவிழா
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் உள்ள திருவெண்ணீற்று உமையம்மை உடனாகிய சிவலோகத் தியாகராஜ சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண பெருவிழா வியாழக்கிழமை பக்தா்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.
இக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கும் அப்பகுதியில் உள்ள திருநல்லூரை சோ்ந்த நம்பியாண்டாா் நம்பி மகள் தோத்திரப் பூா்ணாம்பிகைக்கும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் திருமணம் நடைபெற்ற ஐதீக நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும்.
நிகழாண்டு இந்த விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திருஞானசம்பந்தா் உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி, அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடா்ந்து இரவு 10 மணி அளவில் திருஞானசம்பந்தருக்கும், தோத்திரப்பூா்ணாம்பிக்கைக்கும் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது.
பின்னா் அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தருடன் ஆலய உலா நிகழ்வும், தொடா்ந்து அதிகாலை 4.30 மணி அளவில் திருஞானசம்பந்தா் பேரின்ப பேரளிக்கும் சிவஜோதியில் கலக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மிக எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் கோயில் அா்ச்சகா்கள் மட்டும் பங்கேற்றனா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.