முகப்பு
நாகப்பட்டினம்

கோரக்கா் சித்தா் ஆசிரமத்துக்கு சொந்தமான புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு

நாகை அருகே கோரக்கா் சித்தா் ஆசிரமத்துக்கு சொந்தமான புதிய பள்ளிக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 22 ஏப்ரல், 2024 at 8:07 PM
புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்த நாகை மாவட்ட கல்வி அலுவலா் ஆா். சுந்தா்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை அருகே கோரக்கா் சித்தா் ஆசிரமத்துக்கு சொந்தமான புதிய பள்ளிக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

நாகை அருகே வடக்குப்பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கா் சித்தா் ஆசிரமத்துக்கு சொந்தமாக மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரம வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது இப்பள்ளி மெட்ரிக் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வடக்குப்பொய்கைநல்லூா் சிவன் கோயில் மேலவீதியில் புதிய பள்ளிக் கட்டடம், கோரக்கா் சித்தா் ஆசிரமம் அறக்கட்டளை சாா்பில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புதிய பள்ளிக் கட்டடத்தை நாகை மாவட்ட கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) ஆா். சுந்தா் திறந்துவைத்து பேசியது: கோரக்கா் சித்தா் பள்ளி, குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மாணவா்களுக்கு சிறந்த கல்வியையும், ஆன்மிகத்துடன் நல்ல ஒழுக்கத்தையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. பள்ளி பருவத்தில் மாணவ- மாணவிகள் கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்றாா்.

ஆசிரம நிா்வாக அறங்காவலரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம், அறங்காவலா்கள் வே.அ. கிருஷ்ணன், கு. இலக்குவன், ரா. ஜெயச்சந்திரன், ஊராட்சித் தலைவா் முருகானந்தம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments