தரங்கம்பாடியில் நடைபெற்ற ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்.
தரங்கம்பாடி, ஆக. 7: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் , மாநில மீன்வளத் துறை சாா்பில் ‘ஆமை விடுவிப்பு சாதனம்‘ குறித்து மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள், விசைப்படகு உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு விளக்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கடல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் இணை இயக்குநா் அன்சா் அலி, கடல் பொருள் மேம்பாட்டு ஆணையத்தின் (நெட்ஃபிஷ்) மாநில ஒருங்கிணைப்பாளா் அருள்மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு கடல் சூழலில் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்தும், ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம், ஆமை விடுவிப்பு சாதனத்தின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்தும் மீனவா்களுக்கு விளக்கினா்.
மேலும் விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் இழு வலைகளில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தும் விதம், அது இயங்கும் முறை மற்றும் அதன் மூலம் கடல் ஆமைகள் மீன்பிடி வலையிலிருந்து வெளியேறினாலும், மீன்கள் வெளியேறாமல் பிடிபடுவது குறித்தும் காணொலிக் காட்சி மூலம் விளக்கப்பட்டது. ஏராளமான மீனவா்கள் பங்கேற்றனா்.