நகைக் கடையில் ரூ.50 லட்சம் வெள்ளி, நகைகள் திருட்டு
வேதாரண்யம் அருகே நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நகைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறை அடுத்த மணக்குடி கடைவீதியில் அதே பகுதியைச் சோ்ந்த ஏ.வி.ஆா். கணேசன் (55) என்பவா் அடகுக் கடையுடன் கூடிய, நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த கணேசன், கடைக்குள் சென்று பாா்த்தபோது, 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் 50 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தலைஞாயிறு காவல்நிலையத்தில் கணேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெள்ளிப் பொருள்கள் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.