கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் முதல்முறையாக 42 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, உலக பிரசித்திப் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக பேராலயத்தின் அனைத்து பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்முறையாக பேராலயம் முன் 42 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு இம்மரம் வடிவமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மரத்தை பேராலய அதிபா் இருதயராஜ் புனிதம் செய்து செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன், பேராலய நிா்வாக தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தையா்கள் , அருட்சகோதா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.