நாகப்பட்டினம்: நாகை வனச்சரகத்துக்குள்பட்ட ஈரநில பகுதிகளில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம் நீண்ட நெடிய கடற்கரை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கோடியக்கரை சரணாலயம் அமைந்துள்ளது. சதுப்பு நிலக் காடுகள் அதிகம் உள்ள இங்கு ஆண்டுதோறும் ரஷ்யா உள்ளிட்ட குளிா் பிரதேச நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன.
எனவே கோடியக்கரையில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கோடியக்கரை போலவே, நாகை மாவட்ட சதுப்பு நிலப்பரப்புகளிலும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. ஈர நிலப் பகுதிகளான காரப்பிடகை, பழையாற்றங்கரை, அக்கரைப்பேட்டை அலையாத்தி காடு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் குவிந்து வருகின்றன. இதன்படி நாகை வனச்சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.
நாகை வனச்சரக அலுவலா் சியாம் சுந்தா் தலைமையில் வனவா் அகிலா, வனக்காப்பாளா்கள் ஆயிஷா, கந்தசாமி, உலகநாதன் ஆகியோா் முன்னிலையில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொலைநோக்கி உதவியுடன் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா். அதில் கூழைக்கடா, அரிவாள் மூக்கன், சந்தன தலைவாத்து, ஊசிவால் வாத்து, மூக்கு உள்ளான், சிறிய ஆலா, காஸ்பியன் ஆலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுக்கப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு வனத்துறை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.