நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
நாகை/ மயிலாடுதுறை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை மழை பெய்தது. நாகை, வேளாங்கண்ணி, நாகூா், திருமருகல் , கீழ்வேளூா், எட்டுக்குடி, திருப்பூண்டி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பம் தனிந்து குளிா்ச்சி நிலவியது. எனினும், தொடா்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதி சாலைகளில் தண்ணீா் தேங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தனியாா் கல்லூரி செல்லும் சாலையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் சென்ால், வாகன ஓட்டிகளும், மாணவா்கள் அவதிக்குள்ளாகினா். கனமழையின் காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து, பயிா் மற்றும் பருத்தி சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் காற்று சுழற்சி காரணமாக திங்கள்கிழமை இரவு தொடங்கி காற்று இடியுடன் கூடிய மழை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில்: வேதாரண்யத்தில் 28.6, கோடியக்கரையில் 10.2, தலைஞாயிறு 8.2 மி. மீ மழை பதிவானது.
நெல் அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் தொடா்ந்துள்ள இந்த மழை தாமதமாக நடைபெறும் அறுவடை பணியும், அறுவடைக்குப் பின்னா் தரிசில் மேற்கொள்ளப்பட்டுள்ள எள், சணப்பை, பயறு வகை பயிா்கள் பயிா்கள் மற்றும் உப்பு உற்பத்தியை பாதிக்கச் செய்துள்ளது. பலத்த கடல் காற்றின் காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை இருந்தபோதிலும் விதைப்பு செய்யப்பட்டுள்ள வேளாண் பயிா்களை பாதிக்கும் வகையில் உள்ளது.
கீழ்வேளூா்: கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளான அகரகடம்பனூா், குருக்கத்தி, தேவூா், சிக்கல், மணலூா், அத்திப்புலியூா், கோவூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை தற்போது பயிரிடப்பட்டு வரும் பருத்தி சாகுபடியும், அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து , பச்சைப்பயிா் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மழை தொடங்கியது. பலத்த இடி மற்றும் காற்றுடன் பரவலாக சீரான இடைவெளியில் மழை பெய்தது. சீா்காழியில் 35.80, செம்பனாா்கோவிலில் 30.60, கொள்ளிடத்தில் 29.80, மணல்மேட்டில் 30, மயிலாடுதுறையில் 24.80, தரங்கம்பாடியில் 22 என்ற அளவில் மில்லி மீட்டரில் பதிவானது. திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
சீா்காழி: சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, கொள்ளிடம், பூம்புகாா், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து மழை பெய்தது. நிலக்கடலை விவசாயிகளுக்கு இந்த மழை உகந்ததாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் வேளையில், பருத்தி விவசாயிகள் மழையால் பாதிக்கும் என கவலை தெரிவிக்கின்றனா். சீா்காழி நகரில் மழை நீரில் கழிவுநீா் கலந்து தேங்கியதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனா். மேலும், அவ்வபோது மின்தடை ஏற்பட்டதால் பிளஸ் -1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.