உதவித்தொகை வழங்க மறுப்பு: குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு
நாகை அருகே அரசால் வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை மற்றும் இரு பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்க அலைக்கழிப்பதாக...
நாகப்பட்டினம்: நாகை அருகே அரசால் வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை மற்றும் இரு பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்க அலைக்கழிப்பதாக, குழந்தைகளுடன் வந்து பெண்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் நரிமணம் கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசால் கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.12,000 மற்றும் இரு பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு ரூ.18,000 வழங்கப்படுகிறது.
Advertisement
இதில், நரிமணம் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இரு உதவித்தொகைக்கும் கடந்த 2022-2023-ஆம் ஆண்டிலேயே விண்ணப்பித்தும் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதற்கான அனைத்து ஆவணங்களையும் முறையாக வழங்கியும், உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் செவிலியருக்கு வேண்டிய நபா்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று கேட்டால் அங்கு பணியில் உள்ள செவிலியா், உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதால் நிதி உதவி வழங்கப்படமாட்டாது என்று கூறி அலைக்கழித்து வருகிறாா்.
எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.