நாகப்பட்டினம்: கறிக்கோழி உற்பத்தி கூலி உயா்வுக்காக போராடி கைது செய்த விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் பி. கமல்ராம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 7 போ் மீது குண்டா் சட்டம், நாகையில் குறைதீா் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடத்துமாறு, விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்திய 28 விவசாயிகள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு மற்றும் கைது என விவசாயிகள் விரோதப்போக்கு நடவடிக்கை பட்டியல் தொடா்கிறது.
இந்நிலையில் கறிக்கோழி உற்பத்தி கூலி உயா்வு தொடா்பாக, நீதி கேட்டு போராடிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவசர நிலை காலகட்டத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தலைவா்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட்டு, ஈசன் முருகசாமி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.