காரைக்கால் பகுதியில் சாலைகள் சீர்கேட்டால் காற்று மாசு என்.எஸ். செல்வமுத்துக்குமாரசாமி
காரைக்கால் பகுதியில் பழுதடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, கிளம்பும் தூசி, துகள்களால்
காரைக்கால்காரைக்கால் பகுதியில் சாலைகள் சீர்கேட்டால் காற்று மாசு என்.எஸ். செல்வமுத்துக்குமாரசாமி
காரைக்கால் பகுதியில் பழுதடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, கிளம்பும் தூசி, துகள்களால்
காரைக்கால் பகுதியில் பழுதடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட நகர சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, கிளம்பும் தூசி, துகள்களால் காற்று மாசு ஏற்படுகிறது என்றும், அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக வாஞ்சூர் முதல் போலகம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் இந்த பணி நிறைவுபெற்றுள்ளது.
தற்போது, ரூ.10 கோடி மதிப்பில் பூவம் பகுதியிலிருந்து திருமலைராஜனாறு பாலம் வரை சாலையை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டராக அகலப்படுத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணிக்காக சாலையோர மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், திருமலைராஜனாறு பாலம் முதல் ஓ.என்.ஜி.சி. அலுவலகம் வரை மட்டுமே மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் 4 கி.மீ. தூரத்துக்கிடையே உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். ஆமை வேகத்தில் நடந்துவந்த இப்பணி தற்போது, மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இப் பணியை நிறைவு செய்தால்தான் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்க முடியும் என பொதுப் பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் பெய்த மழையால் அரசலாறு பாலம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான 6 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது சாலையில் இருந்து கிளம்பும் தூசி, துகள்கள் காற்றில் படர்ந்து புகை மூட்டம்போல் காணப்படுகிறது. இதன்காரணமாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவதிப்படுகின்றனர். அவர்கள் முகத்தில் பாதுகாப்பு உறை (மாஸ்க்) அணிந்து செல்கின்றனர். இதேபோல், நகரப் பகுதியில் மாதா கோயில் வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட நகரச் சாலைகளும் பழுதடைந்துள்ளன.
இந்த பாதிப்புகளை சரிசெய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரோ, பொதுப்பணித்துறை அலுவலர்களோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மின் கம்பங்களை இடமாற்றம் செய்தால்தான் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியும் என்று பொதுப்பணித் துறையினரும், மின்துறை செய்யவேண்டிய பணிக்கு தேவையான நிதியாதாரத்தை பொதுப்பணித் துறை வழங்கினால் பணிகளை விரைவாக முடிக்க முடியும் என மின் துறையினரும் மாறிமாறி கூறிவருகின்றனர்.
இதுகுறித்து மின் துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால் கூறியது:
திருமலைராஜனாறு பாலம் முதல் ஓ.என்.ஜி.சி. வரை மின் கம்பங்கள் மாற்றி நடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள மரங்களை அகற்றவேண்டும். மரங்களை அகற்ற முயற்சித்தால் சில பிரச்னைகள் எழுகின்றன. இந்த பணிகளை பொதுப்பணித் துறை நிர்வாகம் முடித்துத் தருவதோடு, மின் துறைக்கு தரவேண்டிய நிதியுதவியை வழங்கினால் எஞ்சிய பணியை மின் துறை தொடங்கும். எவ்வளவு காலத்திற்குள் இந்த பணியை மின் துறை முடிக்கும் என தெரிவிக்க இயலாது என்றார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ. ராஜசேகரன் கூறியது:
இந்த சாலையை அகலப்படுத்த மரங்களை அகற்றுவது என்பது சிறிய வேலைதான். இந்த பணியை பொதுப்பணித்துறை செய்துத்தரும். எஞ்சியுள்ள இடத்தில் மின் கம்பங்களை மின்துறையினர் எவ்வளவு விரைவாக மாற்றியமைக்கிறார்களோ, பொதுப்பணித்துறை அந்த காலத்திலிருந்து ஒரு மாதத்தில் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும். தற்போது சாலை மிக மோசமாக சீர்கெட்டுள்ளதால், தாற்காலிகமாக சீரமைப்பு செய்வதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்வோம் என்றார்.
துணை நிலை ஆளுநர் தலையிடுவாரா? : நிதி இல்லாமல் பல்வேறு பணிகள் காரைக்காலில் முடங்கியுள்ளன. சாலை மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி தந்துவிட்ட நிலையில், பணிகளை அரசுத் துறையினர் மெத்தனப்போக்குடன் செய்வது குறித்து புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக, புதுவையில் தனக்கே அதிகாரம் இருப்பாதக் கூறும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, இதுபோன்று பிரச்னைகளில் கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.