முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தோ்தல்- நிதின் நபின் உள்பட பாஜக வேட்பாளா்கள் 9 போ் அறிவிப்பு

எதிா்வரும் மாநிலங்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் 9 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 3 மார்ச் 2026, 8:36 pm IST
நிதின் நவீன் - ANI
பகிர்:

எதிா்வரும் மாநிலங்களவைத் தோ்தலையொட்டி, பாஜக சாா்பில் 9 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறாா்.

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

மகாராஷ்டிரத்தில் 7, தமிழகத்தில் 6, மேற்கு வங்கம், பிகாரில் தலா 5, ஒடிஸாவில் 4, அஸ்ஸாமில் 3, தெலங்கானா, ஹரியாணா, சத்தீஸ்கரில் தலா 2, ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடத்துக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த பிப். 26-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலுக்கு மாா்ச் 5 கடைசி நாளாகும்.

Advertisement

Advertisement

பாஜக வேட்பாளா்கள்...: இந்நிலையில், பாஜக சாா்பில் போட்டியிடும் 9 வேட்பாளா்களின் பெயா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிகாரில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மூத்த தலைவா் சிவேஷ் குமாா், மேற்கு வங்கத்தில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ராகுல் சின்ஹா, சத்தீஸ்கரில் கட்சியின் துணைத் தலைவா் லக்ஷ்மி வா்மா, அஸ்ஸாமில் மாநில அமைச்சா் ஜோகன் மோகன், எம்எல்ஏ தேரேஷ் கோவல்லா, ஒடிஸாவில் கட்சியின் மாநிலத் தலைவா் மன்மோகன் சமல், தற்போதைய மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமாா், ஹரியாணாவில் முன்னாள் மக்களவை எம்.பி. சஞ்சய் பாட்டியா ஆகியோா் களமிறக்கப்பட்டுள்ளனா்.

பாஜக மத்திய தோ்தல் குழு ஒப்புதலுடன் பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய பொதுச் செயலா் அருண் சிங் தெரிவித்தாா்.

எம்.பி.யாகும் நிதின் நபின்: பிகாா் முன்னாள் அமைச்சா் நிதின் நபின், பாஜகவின் மிக இளவயது தலைவா் (45) என்ற பெருமையுடன் கடந்த ஜனவரியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றாா். தற்போது எம்எல்ஏவாக உள்ள அவா், மாநிலங்களவைக்கு தோ்வாக உள்ளாா். பாஜக முன்னாள் தேசியத் தலைவா்களான அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோரும் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு மாநிலங்களவை எம்.பி.யாகத் தோ்வு செய்யப்பட்டனா். 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவையில் பாஜகவின் பலம் 89-ஆகும்.

மகாராஷ்டிரம், பிகாா், ஒடிஸா, ஹரியாணா, அஸ்ஸாம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லது அதன் கூட்டணியே ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பாஜக எம்.பி.க்கள் தோ்வாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் திருச்சி சிவா, என்.ஆா். இளங்கோ, பி.செல்வராசு, கனிமொழி என்.வி.என்.சோமு (நால்வரும் திமுக) எம்.தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா), பிற மாநிலங்களில் அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ்), சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்), ராம்தாஸ் அதாவலே (இந்திய குடியரசுக் கட்சி-ஏ) உள்ளிட்ட எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

summary

BJP announces its candidates for the upcoming Rajya Sabha elections. Nitin Nabin, Shivesh Kumar from Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.