முகப்பு
காரைக்கால்

செல்லூர் கிராம மக்களிடம் அமைச்சர் குறைகேட்பு

செல்லூர் கிராமத்தில் அரசு அலுவலர்களுடன் சென்று  அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

செல்லூர் கிராமத்தில் அரசு அலுவலர்களுடன் சென்று  அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.
திருநள்ளாறு தொகுதிக்குள்பட்ட செல்லூர் கிராமத்திற்கு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திங்கள்கிழமை சென்றார். சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன், வட்டாட்சியர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி உள்ளிட்ட அலுவலர்கள் அமைச்சருடன் சென்றிருந்தனர்.
கிராமத்தில் உள்ள பல்வேறு வீதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பகுதியில் சுமார் 300 வீடுகள் இருப்பதாகவும், கீற்று வீட்டை கான்கிரீட் வீடுகளாகவும், கழிப்பறை வசதிகளையும், மின் விளக்கு வசதி, குடும்ப அட்டையை சிகப்பு நிற அட்டையாக மாற்றித்தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
கான்கிரீட் வீடு கட்ட தரப்படும் மானியத் தொகை விவரத்தைக் கேட்டறிந்த அமைச்சர், விரைவாக உரிய மானியத் தொகை தரப்படும். அதனைக்கொண்டு வீடு கட்டிக்கொள்ளவேண்டும் என அறிவுரை கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனிநபர் கழிப்பறைகளைக் கட்டி முடிக்கவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இதனை சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் கண்காணிக்கவேண்டும் எனவும் அலுவலர்களிடம் கூறினார்.
கெயில் நிறுவனம் மூலம் சுமார் 11 ஆயிரம் வீடுகளுக்கு எரிவாயு உருளை வழங்கப்பட்டுள்ளது. மேலும்  2 ஆயிரம் வீடுகளுக்கு உருளை கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கெயில் நிறுவன அலுவலரை தொடர்புகொண்டு பேசிய அமைச்சர், வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 500 வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகிக்க கெயில் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
ரேஷன் அட்டை மஞ்சள் நிறத்தில் பெரும்பாலானவர்களிடம் உள்ளதாகவும், பெரும்பான்மையினர் கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். எனவே சலுகைகள் கிடைக்கக்கூடிய சிகப்பு நிற ரேஷன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என பலர் அமைச்சரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர் கூறினார்.
மனைப்பட்டா வழங்கல், பட்டா பெயர் மாற்றம் செய்துதருதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதோடு, கிராமப்புறத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்குகள் உரிய வகையில் எரிகிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் கிராமப்புற இளைஞர்கள் ஒருங்கிணைந்து, இளைஞர் மன்றம் என்பதை தொடங்கி, கிராமப்புற குறைகளை ஆட்சியரை சந்தித்து முறையிடலாம் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →