காரைக்கால்

கேந்திரிய வித்யாலயத்துக்கு தேவை நிரந்தர கட்டடம்: மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா புதுச்சேரி முதல்வர்?

காரைக்கால் கேந்திரிய வித்யாலயம் அப்போதைய மத்திய இணை அமைச்சரும், தற்போதைய புதுச்சேரி முதல்வருமான வி. நாராயணசாமியின்  தீவிர முயற்சியால் 2010 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் கேந்திரிய வித்யாலயம் அப்போதைய மத்திய இணை அமைச்சரும், தற்போதைய புதுச்சேரி முதல்வருமான வி. நாராயணசாமியின்  தீவிர முயற்சியால் 2010 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
கடந்த 8 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் பள்ளி இயங்கும் நிலையை போக்கி, பள்ளிக்கான 8 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு ஒப்படைக்க முதல்வர் வி. நாராயணசாமி ஏற்பாடு செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி நிலையமாக கேந்திரிய வித்யாலயா உள்ளது. பொதுவாக மத்திய அரசு நிறுவனங்கள் உள்ள மாவட்டங்களில் இந்த பள்ளி அமைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த விதிகள் தளர்த்தப்பட்டு பல இடங்களிலும்  பள்ளி அமைக்கப்படுகிறது.
காரைக்காலில் என்.ஐ.டி., ஓ.என்.ஜி.சி., புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், காரைக்கால் துறைமுகம் உள்ளிட்டவற்றில் வெளிமாநிலத்தவர்கள் பணி செய்வதால், காரைக்காலுக்கு கேந்திரிய வித்யாலயத்தின் தேவை என்கிற வலியுறுத்தல் மேம்பட்டது.
இதற்கான அடித்தளத்தை புதுச்சேரியின் அப்போதைய மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ் எடுத்தாலும், பிரதமர் அலுவலக இணை அமைச்சராக வி. நாராயணசாமி இருந்தபோது, காரைக்காலில் கேந்திரிய வித்யாலாயா அமைவது முழு வடிவம் பெற்றது.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பயன்பாடு இல்லாத அரசு நடுநிலைப் பள்ளிக்கான கட்டடத்தை சீரமைத்து, கேந்திரிய வித்யாலயம் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கட்டடத்தின் மேற்கூரை ஷீட்டுகளால் போடப்பட்டதாகும். விளையாட்டு மைதானம் இல்லை. கேந்திரிய வித்யாலத்துக்கான விதிகளின்படி போதிப்பு செய்ய வசதிகள் இல்லாத சூழலாலும், வகுப்புகள் அதிகரிக்கத் தொடங்கியதாலும் மாற்று இடம் தேவைப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிரவி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கிய கட்டடத்தை சீரமைத்து கேந்திரிய வித்யாலயம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. கேந்திரிய வித்யாலயம் ஒரு பிராந்தியத்தில் தொடங்கப்பட்டால், அதற்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான நிலத்தை அந்த மாநில அரசு வழங்க வேண்டும். ஆனால், மத்தியில் காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் அரசும் இருந்த காரணத்தால் கொள்கை முரண்பாடு உள்ளிட்ட  காரணங்களால் நிரந்தர நிலம் ஒதுக்கீடு செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது.
இப்போது கேந்திரிய வித்யாலயத்தை காரைக்காலில் அமைக்க கடுமையாக பாடுபட்ட வி. நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராக இருந்தும், தாராள மனப்போக்கோடு பள்ளிக்கு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை கொண்டிருந்த பெற்றோர்கள், மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றமே விஞ்சியுள்ளது.
கேந்திரிய பள்ளிக்கு காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதியிலும், காரைக்கால் நகரப் பகுதியிலும் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. 
இந்த இடம் பள்ளமாக இருப்பதால், மணல் கொட்டி நிரப்பித்தருமாறு கேந்திரிய தலைமையகம் கோருவதை புதுச்சேரி அரசால் செய்துத்தர முடியவில்லை. இதனால் நிலம் ஒப்படைப்பு கிணற்றில் போடப்பட்ட கல் போல இருப்பதாக பள்ளியின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காரைக்காலில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரி இயங்கத் தொடங்கியுள்ளது. கடலோரக் காவல்படை மையம் செயல்படுகிறது. பல்வேறு மாநிலத்தவர்கள் காரைக்காலில் பணியாற்றும்போது, அவர்களது குழந்தைகளை கேந்திரிய வித்யாலத்தில் பயிற்றுவிக்க வருகின்றனர். ஆனால், தற்காலிக கட்டடம் அவர்களுக்கு முழு திருப்தியை தரவில்லை.
தற்போது இந்த பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வரை ஏறக்குறைய 500 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் இந்த பள்ளியில் மட்டும் பாடம் பயிற்றுவிக்கப்படுவது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் வகுப்பறைகளும், ஆய்வுக்கூடமும் தேவை என்பதால், இதை மாவட்ட  நிர்வாகம் செய்துத்தரும் என உறுதியளித்ததால், கேந்திரிய வித்யாலயத்தின் தலைமை பிளஸ் 1 சேர்க்கைக்கு அனுமதித்தது.
கடந்த 2017 -ஆம் ஆண்டு அனுமதி பெற்று மாணவர் சேர்க்கை செய்தும், மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறியும் இதுவரை ஆய்வுக்கூடம் முழுமையாகி மாணவர்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடந்த 2018 -ஆண்டு பத்தாம் வகுப்பில் கேந்திரிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
பெற்றோர்கள் வலியுறுத்தல் : கேந்திரிய வித்யாலயத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 20 முதல் ரூ. 22 கோடி வரை தருவதற்குத் தயாராக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்தது.
புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தனி கவனம் செலுத்தி, காரைக்காலில் உரிய இடத்தை கேந்திரிய வித்யாலயத்துக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் என்.ஐ.டி. அமைவதற்கு 300 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்த புதுச்சேரி அரசு, கேந்திரிய பள்ளிக்கு 8 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க தயக்கம் காட்டலாமா எனவும் எனவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கேந்திரிய பள்ளி முதல்வர் வாசகன் செவ்வாய்க்கிழமை கூறும்போது, பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்குத் தேவையான நிதி, கேந்திரிய வித்யாலயத்தில் தயாராக உள்ளது. புதுச்சேரி அரசிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு கேட்டு வருகிறோம். நிலம் பள்ளமாக இருப்பதை அளிக்க முன்வருகிறார்கள். மணல் நிரப்பித் தருமாறு கோருகிறோம். இதனால் தீர்வு இல்லாமல் நீடிக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காரைக்காலில் கேந்திரிய வித்யாலயத்துக்கு நிரந்தர கட்டடம் மிகவும் அவசியும். இதற்கான ஏற்பாட்டை மாநில அரசு செய்துத் தந்தால் மாணவர் நலனுக்கு உகந்ததாக அமையும். எங்களால் இயன்ற அளவு முயற்சித்து வருகிறோம் என்றார்.
காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. வளாகத்தில்  ஒரு கேந்திரிய வித்யாலயம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் சேர்வதற்கு மாணவர்கள் காரைக்காலில் ஏராளமானோர் உள்ளனர். மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தமிழகத்தில் கூடுதலாக கேந்திரிய வித்யாலயம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் கூடுதலாக கேந்திரிய வித்யாலயம் அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, நீண்ட காலமாக தற்காலிக வளாகத்திலேயே காரைக்கால் கேந்திரிய வித்யாலயம் இயங்கி வருவதை ஏற்காமல், அருகில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியோடு இணைத்துவிடவும் கேந்திரிய வித்யாலயத்தின் தலைமையால் முடியும். வேறு மாநிலங்களில் இதுபோல நடந்துள்ளது என்கிறது கல்வியாளர் வட்டாரம். எனவே, இருக்கும் பள்ளியை இழந்துவிடாமல் காக்கும் பொறுப்பு புதுச்சேரி மாநில அரசுக்கு உள்ளது எனவும் அந்த வட்டாரம் மேலும் வலியுறுத்துகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT