புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
இயேசு பிரான் தமது 12 சீடர்களின் பாதம் கழுவியதை நினைவூட்டும் வகையில் காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இயேசு பிரான் தமது 12 சீடர்களின் பாதம் கழுவியதை நினைவூட்டும் வகையில் காரைக்கால் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள 46 நாள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறக் கூடிய புனித வெள்ளியையொட்டி, வியாழக்கிழமை காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு நாதர் தமது சீடர்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லை, சமமானவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இவ்வகை செயலில் ஈடுபட்டார். அதை சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் வகையில் ஆண்டுதோறும், கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பில் அந்தந்த பங்குகுரு, சீடர்களின் பாதம் கழுவி மகிழும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சார்பில், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பலி நடத்தப்பட்டு, பள்ளி மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில், 12 சீடர்களின் பாதம் கழுவி அருள்தந்தை முத்தமிட்டார்.
இதேபோல், கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்திலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து புனித வாரத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றப்பட்டன. காரைக்கால் மற்றும் கோட்டுச்சேரி பங்குக்குள்பட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.