காரைக்கால் பகுதியில் இலவச அரிசி விநியோகம் தொடங்கியது
காரைக்கால் மாவட்டத்தில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கான இலவச அரிசி வழங்கல் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கான இலவச அரிசி வழங்கல் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியது.
இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் தெரிவித்ததாவது: வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் வைத்திருக்கும் மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ, ஏழைகளுக்கான சிகப்பு நிற அட்டைக்கு 20 கிலோ என்கிற வீதத்தில் இலவச அரிசி வழங்கலுக்கு துணை நிலை ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்தார்.
காரைக்கால் மாவட்டத்திற்கான இலவச அரிசி சனிக்கிழமை புதுச்சேரியிலிருந்து வரத் தொடங்கியது. முதல்கட்டமாக, நெடுங்காடு தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ததாகவும், திங்கள்கிழமை திருநள்ளாறு தொகுதியில் விநியோகம் செய்ததாகவும், செவ்வாய்க்கிழமை திருப்பட்டினம் தொகுதியில் விநியோகம் செய்யப்படும். மேலும் அரிசி புதுச்சேரியிலிருந்து வரவேண்டியுள்ளது. அடுத்த ஓரிரு நாளில் காரைக்கால் நகரப் பகுதியில் வடக்கு, தெற்குத் தொகுதியில் விநியோகம் செய்யப்படும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 92 ரேஷன் கடைகளில் பதிவாகியிருக்கும் அட்டைதாரர்களுக்கும் அடுத்த ஓரிரு நாள்களில் இலவச அரிசி வழங்கப்பட்டுவிடும் என காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.