புதுச்சேரி வக்ஃபு வாரியத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
புதுச்சேரி வக்ஃபு வாரியத்துக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி வக்ஃபு வாரியத்துக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி வருவாய் மற்றும் வக்ஃபு துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகானிடம், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம் :
புதுச்சேரி வக்ஃபு வாரியத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை சமுதாயத்துக்கான ஒரே நிர்வாகமான வக்ஃபு வாரியத்துக்கு இவ்வாறு குறைவான ஒதுக்கீடு ஏற்புடையதல்ல.
கடந்த 2010 -ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, நிகழாண்டு ஒதுக்கீடு வெகு குறைவாக உள்ளது. வக்ஃபு வாரிய நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான புனரமைப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை. மாநில ஹஜ் கமிட்டி ஊழியர்களுக்கான ஊதியத்தை மாநில வக்ஃபு வாரியத்தின் நிதியோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறது. நிதி பற்றாக்குறையால் வக்ஃபு வாரியத்தின் ஊழியர்களுக்கான ஊதியங்களை சரிவர தர முடியாத நிலை ஏற்படுகிறது.
மாநில ஹஜ் கமிட்டி ஊழியர்களுக்கான ஊதியம் அளிக்கும் வரம்பை மாநில வக்ஃபு வாரியத்துக்கு உள்ளடக்கம் செய்யக்கூடாது. மாநில ஹஜ் கமிட்டி ஊழியர்களுக்கான ஊதியம் தனி ஒதுக்கீடாக இருக்க வேண்டும்.
மேலும், பட்ஜெட்டில் வக்ஃபு வாரியத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற உலமாக்களின் ஓய்வூதியம் தற்போது ரூ. 2 ஆயிரமாக உள்ளதை ரூ. 4 ஆயிரமாக உயர்த்தித் தர வேண்டும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றிவரும் இமாம்களுக்கும், மோதிகளுக்கும் அரசு வக்ஃபு வாரியத்தின் மூலமாக ஊதியம் தருவதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.